சேலம் மாவட்ட சரக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் நலச்சங்க 23-வது வருடாந்திர மகாசபை கூட்டம் சேலத்தில் நடந்தது. சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகேந்திரன் வரவேற்றார். செயலாளர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கபிரேல் வரவு-செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க செயலாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். பின்னர் அவர்கள் மரவனேரி சந்திரா தேவ பிரசாத் நடுநிலைப்பள்ளி ஏழை, எளிய மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடைகள், நோட்டு புத்தகம், புத்தக பைகளை வழங்கினர்.
கூட்டத்தில், சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை முறைப்படுத்தி வசூலித்து லாரி மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் நலன் காக்க வேண்டும். வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய முறையை ரத்து செய்து பழைய முறைகளிலேயே வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். சரக்கு போக்குவரத்தாளர்கள் அனைவரும் பொருட்களை எடுத்து செல்லும் தொலைவுக்கு ஏற்ப லாரி வாடகையை சற்று உயர்த்தி வாங்கி தொழில் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க துணை செயலாளர் சிவஞானம் நன்றி கூறினார்.