எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கி தொழில் அதிபரிடம் மோசடி

68பார்த்தது
எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கி தொழில் அதிபரிடம் மோசடி
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நைனியப்பா தெருவை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 66). இவர் வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு எலக்ட்ரிக்கல் பொருட்களை ஆர்டர் எடுத்து வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி சேலம் சங்கர்நகரை சேர்ந்த பிசரியாராம் (36) என்பவர் சுனில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு கல்லாங்குத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருவதாகவும், தனக்கு எலக்ட்ரிக் பொருட்கள் வேண்டும் எனக்கூறி அதை பார்சலில் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் இருந்து சுனில்குமார், பிசரியாராம் கடையின் முகவரிக்கு ரூ. 15 ஆயிரத்து 200 மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர் பிசரியாராமிடம் பலமுறை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டும் அவர் கொடுக்கவில்லை.
இதனிடையே கடந்த 6-ந் தேதி சேலத்திற்கு வந்த சுனில்குமார் கல்லாங்குத்து பகுதியில் உள்ள பிசரியாராம் கடைக்கு சென்று வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் சுனில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், பணம் தரமுடியாது எனக்கூறி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் சுனில்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து நேற்று பிசரியாராமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி