ஆயுதபூஜை அன்று வீடுகள், கடைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பூஜையிட்டு வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் தங்களின் கடைகள், பணிமனைகள், வாகனங்களுக்கு பூசணிக்காய் சுற்றி உடைத்து திருஷ்டி கழிப்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். அந்த திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளின் நடுவே உடைப்பதும் வழக்கம். பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்ட போதிலும் இது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சேவகன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை அகற்றும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர பகுதிகளில் இரவு முதல் இவர்கள் அதிகாலை வரை இந்த சேவையை செய்கின்றனர். பூசணிக்காய்கள் சாலையின் நடுவே உடைப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த சேவையை செய்து வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பணியை தொடர்ந்து செய்து வருவதாகவும் இக்குழுவினர் கூறுகின்றனர்.