சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூசாரிப்பட்டியில் நாளை மறுநாள் கல்விக்கடன் மேளா நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூசாரிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.பி. சாரதி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விக்கடன் மேளா நடைபெறுகிறது. முகாமில் கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேளாவில் ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே வங்கிகளில் கல்விக்கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ. டி. ஐ படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்து கொண்டிருப்பவர்கள், முதுநிலை கல்வி படிக்கவும் கல்விக்கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.