சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைப்பேட்டையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிளைச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் சண்முக ராஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொருளாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு, தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா துணைத் தலைவர் அரியகவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மலைவாழ் மக்கள் சங்க கிளை நிர்வாகிகள், பழங்குடி, இருளர் இன மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கணவாய் புதூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.