அரசு பண்ணையில் மானிய விலையில் தென்னங்கன்றுகள் விற்பனை

559பார்த்தது
அரசு பண்ணையில் மானிய விலையில் தென்னங்கன்றுகள் விற்பனை
தீவட்டிப்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டையில் தமிழ்நாடு அரசு தென்னை நாற்று பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் நெட்டை, குட்டை, ஹைபிரிட் ரக தென்னை கன்றுகள் வளா்க்கப்பட்டுள்ளன. தற்போது வளா்ந்த தென்னை நாற்றுகள் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நெட்டை, குட்டை தென்னைகள் அதிகமாக சாகுபடி செய்து, அறுவடையும் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், தென்னை நடவு செய்ய வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனா். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தென்னை நாற்றுகள் அதிக அளவில் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தனியாரிடம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தென்னை நாற்றுகள், தமிழ்நாடு அரசின் நாற்று பண்ணையில் ஒரு கன்று ரூ. 125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொண்டு, அதிக அளவில் தென்னை நடவு செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளனா். இதுகுறித்த தகவல்களைப் பெற டேனிஷ்பேட்டை நாற்று பண்ணைக்கு நேரடியாகவோ, 88254-86373 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :