சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர், மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இரும்பாலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் காடையாம்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் மறைவான இடத்தில் இருந்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் குமாருக்கு போன் செய்து மதுப்பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர். குமாரும், 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் தீவட்டிப்பட்டிக்கு வந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், டாஸ்மார்க் கடைகளில் அதிக அளவில் பாட்டில்களை வாங்கி உள்ளார். மேலும் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கூடுதல் விலைக்கு மது விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குமாரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 95 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, குமார் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். காய்கறி விற்பது போன்று குமார் ஊர் ஊராக சென்று மது விற்றதை போலீசார் பொறி வைத்து பிடித்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.