சேலம் மாவட்டம் ஓமலூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சூர்யா (எ) சுரேஷ். இவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் சக கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் கொடுக்கும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் சக கைதிகள் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.
இதனையடுத்து சிறையின் ஒன்பதாவது தொகுதியில் இருந்து 15 அறைக்கு சூர்யா மாற்றப்பட்டார். அப்போது எதற்காக தன்னை மாற்றினீர்கள் எனக் கூறி சிறை அதிகரிகளிடம் கைதி சூர்யா தகராறு செய்துள்ளார். இதனால் சிறை அதிகாரிகள் மூன்று மாதம் உறவினர்களை சந்திக்க சூர்யாவுக்கு தடை விதித்தனர். இதனிடையே மாத்திரை அட்டைகளை கொண்டு கை, கால்களை சூர்யா கிழித்துக்கொண்டார்.
இதனால் அவரை சிறை மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரை போலீசார் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் சிறையில் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் தனி அறையில் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து நீதிபதி அவரை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், ஓமலூர் கிளை சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சேலம் சிறைக்கு கொண்டு வந்து ஆஜர்ப்படுத்தி விட்டு ஓமலூர் சிறையில் அடைத்தனர்.