சேலம் மாவட்டம் மேச்சேரி வடக்கு, கிழக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு குறித்த செயற்குழு கூட்டம் மேச்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் அக்னி சுதாகர் (வடக்கு), வக்கீல் துரைராஜ் (கிழக்கு) ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், மேட்டூர் தொகுதி மாநாட்டு குழு பொறுப்பாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளர் வக்கீல் துரைராஜ், சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சதாசிவம் எம்.எல்.ஏ. கூறும்போது, 'மே மாதம் 11-ந் தேதி நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு தொண்டர்கள், பொதுமக்கள் அதிக வாகனங்களில் வர வேண்டும், இளைஞர்களை அழைத்து வர வேண்டும். ஒன்றியம் முழுவதும் கிளை கூட்டங்கள் நடத்தி மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.