சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, தெடாவூர் பகுதியில் இருந்து, நடுவலுார், ஒதியத்துார் பிரிவு சாலை, கெங்கவல்லி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம், 2:00 மணியளவில், நடுவலுார் மின் பாதையில், மின் ஒயர் துண்டிப்பு ஏற்பட்டதால், மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதில் பள்ளக்காடு பகுதியில் பழுதான மின்கம்பி சரிசெய்து, மின் வினியோகம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. நேற்று இரவு, 10:00 மணிக்கு மேலும், மின் வினியோகம் இல்லாததால், எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, நடுவலுார், செட்டிக்குளம், மோட்டூர், பள்ளக்காடு, ஒதியத்துார் பிரிவு சாலை உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், மின் வினியோகம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், கோடை வெயிலில் தவிக்கும் மக்கள், மின்தடையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.