சேலம் அருகே பூலாம்பட்டி சுற்றுப்பகுதிகளில், கனமழையால், கரும்பு, சோளப்பயிர்கள் சேதமடைந்தன.
பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, நெடுங்குளம், குப்பனூர், கூடக்கல், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 1,000 ஏக்கரில் கரும்பு, 30 ஏக்கரில், சோளம் பயிரிடப்பட்டுள்ளன. நன்கு வளர்ந்த நிலையில், பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் உள்ள கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்ட ஏக்கரில், கரும்பு பயிர்கள் சேதமடைந்தன.
அதேபோல், வெள்ளரி வெள்ளி, குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்திருந்த, 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் இருந்த சோளப்பயிர்கள், சாய்ந்து சேதமடைந்தன. அதனால், இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.