சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் 2022 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, காணொளி காட்சி வாயிலாக நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
மேலும் இந்த நூலகத்தில் அரசுத் தேர்வாணைய தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் நாளொன்றுக்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூலகத்தில் இருந்த குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் பழுதாகி இருந்ததால், ஒரு வாரமாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்தகரிக்கும் இயந்திரத்தைச் சரிசெய்யாமல் இருப்பதால், அங்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திலேயே குடிநீர் இல்லாமல் மாணவர்களே சொந்தச் செலவில் குடிநீர் வாங்கி வைக்கும் அவலநிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பழுதடைந்த குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரத்தைச் சரிசெய்ய வேண்டும் என வாசகர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.