ராமநாதபுரம் மையத்தில் சர்வர் பழுதால் ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்துார், பரமக்குடி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் 84 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒரு மேஜையில் இரு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் என 400 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 8: 00 மணிக்கு முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணிகள் நடந்தது. பின் 8: 30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னணி நிலவரங்கள் வெளியிடாமல் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக பத்திரிகையாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணுசந்திரனிடம் முறையிட்டனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் சர்வர் பழுது காரணமாக முன்னணி நிலவரங்கள் வெளியிட தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். காலை 10: 00 மணிக்கு பின் ஓட்டு எண்ணிக்கை செய்யப்பட்டு முன்னணி நிலவரங்கள் வழங்கப்பட்டன.