ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் இயங்கிவரும் நீதிமன்ற கட்டடம் கடந்த 35 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட காதி கதர்வாரியத்திற்கு சொந்தமான 2. 41ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தமிழ்நாடு சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கமுதி சுற்று வட்டார பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பணிடம் வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை நீதிமன்ற கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட 2. 41 ஏக்கர் இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.