ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி கீழப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (53). இவர் வழியாம்பட்டி டாஸ்மாக் மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (43) கூலி தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு ராஜலெட்சுமி (17) என்ற மகளும், ராஜசுதன் (15), ராஜகுகன் (13) என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, ராஜலெட்சுமி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சம்பட்டிவிடுதி போலீசார், ராஜலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்து, பெற்றோரிடம் உடல் ஒப்படைத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.