புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ராஜிநிவாசில் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், குரூப்–பி பணியிடங்களான பொதுப்பணித்துறையின் இளநிலைப் பொறியாளர் (JE) மற்றும் ஓவர்சீஸ், கல்வித் துறையின் பட்டதாரி ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர், நிர்வாகத்துறையில் உதவியாளர் (ASSISTANT) போன்ற பதவிகளுக்கு இவ்வாண்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பத்தாண்டுகளுக்கு பிறகு மிகவும் தாமதமாக வந்துள்ளது. இவை காலத்தோடு அறிவிப்பு செய்திருந்தால் பல பட்டதாரிகள் தங்கள் வயது வரம்பை எட்டும் முன்பாக அந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிருக்க முடியும்.
குறிப்பாக உதவியாளர் (ASSISTANT) பதவி இவ்வாண்டு தான் முதல் முதலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அறிவிக்கப்பட்டது. இதற்கு நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஓரிரு வயது அதிகமான காரணத்தால் விண்ணப்பித்து போட்டித் தேர்வில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது.
எனவே நடைபெற உள்ள உதவியாளர் (ASSISTANT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மூன்று ஆண்டுகால வயது தளர்வு அளித்து, புதுச்சேரி பட்டதாரிகள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.