பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 6. 45 மணிக்கு அரசு புறநகர் பேருந்து புறப்பட்டு வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர் வழியாக மலையாளப்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் காலை 8 மணிக்கு புறப்பட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 9: 15 மணிக்கு வந்து சேரும். காலை நேரம் என்பதால் இந்த பேருந்தில் அரும்பாவூர், வெங்கலம், வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கின்றனர். இது மட்டுமின்றி காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பணிக்கு செல்பவர்களும் பயணிக்க இந்த பேருந்து ஏதுவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து அடிக்கடி விழா காலங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும், வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்படுகிறது. இவ்வாறு மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் இந்த பேருந்து சென்னை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்படுவதால், இந்த பேருந்தை நம்பி இருக்கும் மாணவ மாணவிகள் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் மலையாளபட்டி கிராமத்திற்கு இன்று காலை வந்த அரசு புற நகர் பேருந்தை மலையாளபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.