கோவை: முக்காடு அணிந்து நூதன போராட்டம்
கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக கவுன்சிலர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அதிமுக கவுன்சிலர்களான சர்மிளா, பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தங்கள் தலையில் முக்காடு அணிந்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர். சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு செய்ததாகவும், இந்த வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டம் தொடங்கியதும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேவேளையில், ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தின் பராமரிப்பு தொடர்பாகவும் விவாதம் எழுந்தது. தற்போது இந்த மயானத்தை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது. இவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஈஷா யோகா மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், மயான பராமரிப்பு பணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.