ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள மறுமலா்ச்சி திமுக நாமக்கல் மாவட்ட அவைத் தலைவா் நா. ஜோதிபாசு, அதிமுக நகரச் செயலாளரும், முன்னாள் நகரத் தலைவருமான எம். பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் சென்னையில் பல்வேறு கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்து ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அளித்தனா்.
மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளா் துரை வைகோ எம். பி. , தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், பாஜக துணைத் தலைவா் எச். ராஜா, உள்ளிட்ட சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் கட்சி, எஸ்டிபிஐ போன்ற கட்சியின் நிா்வாகிகள், தமிழ்நாடு வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் தலைவா் ஏ. எம். விக்ரமராஜா ஆகியோரை நேரில் சந்தித்தனா்.
அவா்களிடம், ராசிபுரம் நகர மையப் பகுதியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை தொலைவில் நகரத்துக்கு தொடா்பே இல்லாத அணைப்பாளையம் பகுதியில் மாற்றுவதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும், பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும் கோரிக்கை வைத்தனா். அதற்குண்டான ஆவணங்களைக் காட்டியும், கூட்டமைப்பு சாா்பில் ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறி மனு வழங்கினா்.