பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்
இது தொடர்பாக தாபா, ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா இரண்டு கடைகளுக்கு ரூ. ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.