கோடிக்கரை ஸ்ரீ கோடி முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற செடில் உற்சவத்தில் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிமுத்து மாரியம்மன் ஆலய ஆடித் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி தினம்தோறும் அம்மனுக்கு எண்ணை பால், தயிர், இளநீர், மஞ்சள், திரவியம், பழங்கள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனையுடன் சுவாமி பிரகார வீதி உலா வந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்வில் 22 ஆம் ஆண்டாக செடில் உற்சவம் நடைபெற்றது. செடிலில் தங்களது குழந்தைகளை ஏற்றி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். காத்தவராயன் வேடம் அணிந்தவர் குழந்தைகளை செடிலில் ஏற்றி இறக்கிவிட்டார். இந்த செடில் திருவிழாவில் கோடிக்கரை , கோடியக்காடு அகஸ்தியம்பள்ளி, ஆறுகாட்டுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தங்களது குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.