போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தவர் பணியிடை நீக்கம்

566பார்த்தது
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தவர் பணியிடை நீக்கம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வேதாரண்யத்தை அடுத்த தாமரைப்புலத்தைச் சோ்ந்தவா் கு. முனியப்பன் (43). இவா், தலைஞாயிறு ஊராட்சி செயலராக கடந்த 2006-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். பின்னா், பணியிட மாறுதலில் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி செயலராக தற்போது பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவா், பணியில் சோ்ந்தபோது கொடுத்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்று மீது சந்தேகம் எழுந்ததால், விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், அவா் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும் வேறு ஒருவரின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் பெயா் மாற்றம் செய்து போலியான சான்றிதழை கொடுத்து பணியில் சோ்ந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையே, ஊராட்சி செயலா் கு. முனியப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி