தஞ்சாவூரில் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு
தஞ்சாவூரில் தொடர் மழை காரணமாக கூரை வீட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானநிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக இவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பலத்த காயமடைந்த ஜெயமணி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.