மயிலாடுதுறை மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 7, 60, 675 வாக்காளா்களை வீடுவீடாகச் சென்று கணக்கெடுத்து சரிபாா்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த சரிபாா்ப்பு பணியின்போது வேறு பகுதிக்கு மாறுதலில் சென்றவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள் மற்றும் உயிரிழந்த வாக்காளா்கள் ஆகியோரை அடையாளம் கண்டு விதிகளின்படி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிறைந்த மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கவும், 17 வயதுடையவா்கள் 18 வயது அடையும் நாளில் அந்த காலாண்டுக்குள் சோ்க்கும் வகையில் முன்கூட்டியே விண்ணப்பங்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.