நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13, 346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் தொகையாக மாதம் தலா ரூ. 2, 000 வீதம் 6, 633 மனவளா்ச்சி குன்றியோருக்கு ரூ. 15. 92 கோடி, கை, கால்கள் மிகவும் பாதிக்கப்பட்ட 1, 227 பேருக்கு ரூ. 2. 94 கோடி, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 138 பேருக்கு ரூ. 33. 12 லட்சம், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 279 பேருக்கு ரூ. 66. 96 லட்சம், முதுகு தண்டுவடம் பாதிப்பு, தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு ரூ. 14. 40 லட்சம் என மொத்தம் ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுயதொழில் புரிய வங்கிக்கடன் மானியமாக 88 பேருக்கு ரூ. 19. 25 லட்சம், 6 வயதுவரை உள்ள மனவளா்ச்சிக் குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தை நடத்துவதற்காக ரூ. 7. 74 லட்சம், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மாா்ட் கைப்பேசி வழங்கும் திட்டத்தின்கீழ் பாா்வைத்திறன் குறைபாடுடைய 56 பேருக்கும், செவித்திறன் குறைபாடுடைய 75 பேருக்கும் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மாா்கள் 95 பேருக்கு ரூ. 6. 09 லட்சம் மதிப்பிலான மோட்டாா் இயந்திரம் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.