கீழ்வேளூர் அஞ்சுவட்டத்து அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி இத்தனை ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் பசலி வாடகை வசூலித்து வந்துள்ளது. 2021 ம் ஆண்டுவரை பசலி வாடகை செலுத்திய போதும் திடிரென கோவில் நிர்வாகம் மாத வாடகை என அறிவித்து 2000 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென வற்புறுத்துவதாகவும் அந்த தொகை 2016 ஆண்டில் இருந்து கட்ட வேண்டும் எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் குடியிருக்கும் வீடுகள் கோவில் இடம் இல்லையென்றும் அரசு பதிவேட்டில் நத்தம் பூரா நிலம் என்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி வாசிகள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையினர் குடியிருப்பு வாசிகள் நல சங்கத் தலைவர் கோவிந்தராஜின் வீட்டை காலி செய்ய கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறியநிலையத்துறை அதிகாரிகள் வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குடியிருப்பு வாசிகள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.