நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகண்ணாப்பூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்ல உள்ள ஒரே ஒரு சாலையும் கப்பி சாலையாக உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் கஜா புயலின்போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்ததை அடுத்து புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் தற்போது சாய்ந்து எப்போது வேண்டும் என்றாலும் விழும் அபாயம் உள்ளது. மேலும் மின் கம்பிகளும் தாழ்வாக செல்வதால் அப்பகுதி மக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. இது குறித்து மக்களுடன் முதல்வர் முகாம், மின்துறை அலுவலர்கள், கிராம சபா கூட்டங்கள் என்று புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் செவிக்கு கொண்டு செல்லும் வகையில் அக்கிராம மக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின்கம்பங்களை சீரமைத்து தர வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்