நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கப்பட்டு மீன்பிடி உபகரணப் பொருட்களை பறிகொடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் தத்தளித்து பின்னர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கும் விதமாகவும் செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று அறிவித்தனர்.
அதன்படி கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 400 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.