நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் திருமருகல் ஒன்றிய நிர்வாகக் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி கலந்து பேசினார்.
இதில் நாகையில் ஏப்ரல் மாதம் 3 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை நிலுவை தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட கோரி 1-ம் தேதி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.