நாகை அருகே 200 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

67பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வெண்ணாறு வடிநிலை கோட்டத்திற்கு உட்பட்ட ஓடம்போக்கி பாசன வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான நண்டு கன்னி வாய்க்கால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நீண்டுள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் சுமார் நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலையில் தற்போது பட்டமங்கலத்தில் இருந்து கடலில் கலக்கக்கூடிய நண்டு கன்னி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பட்டமங்கலம் ஊராட்சியில் இருந்து செல்லக்கூடிய வாய்க்கால் ஓரங்களில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சாய்த்து வயல்களை நிரப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனைமரம் வெட்டுவதற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே பனை மரங்களை வெட்ட வேண்டும் என்ற சட்டமும் மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிவிப்பிற்கு முரண்பாடாக தூர்வாரும் பணியின்போது சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி