தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த நாகராஜ் இன்பவள்ளி தம்பதியினரின் மகனான ராணுவ வீரர் முத்து. இவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10ம் தேதி நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனை
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ராணுவ வீரரின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று ( நவ. 12) மாலை மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு மதுரை மாவட்டம் சார்பாக அரசு மரியாதை செய்யும் விதமாக இந்திய ராணுவம் சார்பாக கர்னல் ராஜீவன், மதுரை திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா உள்ளிட்டர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் தேனி மாவட்டம் அல்லி நகரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.