மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தங்கச் சப்பரம், அன்னம், பூதம், கற்பக விருட்சம், காமதேனு, கைலாசபர்வதம், தங்கக் குதிரை, யானை, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர், தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி பிரியாவிடையுடன் தங்கப் பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் தனியாக தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். பின்னர், தெப்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காமராஜர் சாலை, முனிச்சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனர்.