மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு சட்டமன்ற தொகுதி மதுரை மாநகராட்சி 9ஆவது வார்டு பகுதியான மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் எதிரேயுள்ள TM நகர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தெருக்கள் மற்றும் ஆதி சிவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
TM நகர் பகுதியில் உள்ள சாத்தையாறு அணை ஓடையில் இருந்து வண்டியூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் முழுவதும் வெள்ள நீர் நீரம்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஓடையை ஒட்டிய பகுதிகளில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 3 வருடங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தடுப்பு சுவர்கள் கட்டப்படாத நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்கு புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மின் கம்பங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் மின்விபத்து ஏற்படும் என்ற அச்சத்திலும் குடியிருப்புவாசிகள் உள்ளனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.