மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு மனுக்களை அளிப்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில் குறைதீர் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், இ- பட்டா வழங்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை வேண்டியும் , நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகைகளை வழங்க கோரியும் ஏராளமான பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மனுக்களை அளித்து சென்றனர்.
காலை முதலே ஏராளமான பெண்கள் நீண்ட நேரமாக மனுக்களை அளிப்பதற்காக நெடுவரிசையில் காத்திருந்தனர். இதனால் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் தொடங்கி வெளிப்புறம் வரை 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
மேலும் சிவில் மனுக்களான பத்திரப்பதிவு முறைகேடு, நிலப்பிரச்சனை, முதியவர்களின் சொத்துக்களை அபகரிப்பது போன்ற மனுக்கள் அதிகளவிற்கு வரும் நிலையில் அதற்கான உரிய வழிகாட்டுதல்களோ, நடவடிக்கைகளோ இல்லாத நிலையில் மனுதாரர்கள் தொடர்ந்து அலைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின்றி வரும் முதியவர்களிடம் இருந்து மனுக்கள் தொடர்பான உரிய விசாரணை நடத்துவதிலும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் தன்னார்வலர்கள் மூலமாக முதியவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.