மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செப்.,9) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த மண் மற்றும் கட்டிட கழிவுகள் மாநகராட்சி குப்பை லாரிகள் மூலமாக அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.
அப்போது மண் கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை எடுத்துச்செல்லும் லாரிகள் முறையாக மூடப்படாமல் திறந்தவெளியில் எடுத்துச் செல்வதால் லாரிகளில் இருந்து கட்டிட கழிவுகள், மணல்கள் சாலை நெடுகிலும் கொட்டியபடி சென்றது.
மேலும் காற்றில் மணல்கள் பறந்த படி சென்றதால் வாகன ஓட்டிகளின் கண்களில் மண் பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குப்பை லாரியில் பெரிய அளவிலான கற்கள் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக கற்கள் கீழே விழுந்தால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயமான சூழலில் கட்டிட கழிவுகள் எடுத்துச் செல்லப்பட்டது
மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லாரி இதுபோன்று குப்பைகளை அலட்சியமாக எடுத்துச் சென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.