மதுரை மாநகர் கோரிப்பாளையம் அருகேயுள்ள பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பந்தல்குடி கால்வாயில் அடைத்துக் கொண்டிருந்த குப்பைகளை அகற்றியுள்ளனர்.
அப்போது பாலத்தின் அடியில் இருந்த குப்பைகளை அகற்றிகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாலத்தின்கீழே வெள்ளநீரில் பாண்டியராஜன் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்த அவரது நண்பர்கள் பந்தல்குடி கால்வாயில் இறங்கி தேடினர். அப்போது பாண்டியராஜனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாண்டியராஜன் மூழ்கிய பகுதிகளில் மீட்பு பணியை தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாலத்தின் அருகே தீயணைப்புத் துறையினர் தேடிய போது அருகிலேயே பாண்டியராஜன் நீருக்குள் மூழ்கி கிடந்த நிலையில் அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது உடல் உடற்குறைவிற்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
மதுரை பந்தல்குடி பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளை அகற்ற சென்ற கூலி தொழிலாளி பரிதாபமாக நீரில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.