மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டியை சேர்ந்த மணிமாறன் (28) என்பவர் 2021ல் சோழவந்தானில் இரவில் கடை வாசலில் துாங்கிய ஆதரவற்ற மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்த போது மூச்சுத் திணறிய மூதாட்டி இறந்தார். இவ்வழக்கில் சிறை சென்று 2022 மற்றும் 2023 நவம்பரில் வெளியே வரும் போதும் மூதாட்டிகளிடம் தவறாக நடக்க முயற்சித்து காயப்படுத்தியதில் மீண்டும் கைதானார்.
அதனை தொடர்ந்து குண்டாஸ் வழக்கில் சிறைக்கு சென்றவர் கடந்த வாரம் வெளியே வந்து மீண்டும் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கேட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சோழவந்தான் போலீசார் கைது செய்ய சென்ற போது தப்ப முயன்று கீழே விழுந்ததில் மணிமாறனுக்கு கை முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.