கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பொது கழிவறை கட்டுவதற்கு பேரூராட்சி தீர்மானித்து அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தது. டெண்டர் முடிந்த பிறகு தற்போது அந்த இடத்தில் கழிவறை கட்டுவதற்கான பணி தொடங்கியது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் அவரது தம்பி இளையராஜா ஆகியோர் இது எங்களுக்கு சொந்தமான இடம் எனவே இங்கு கழிவறை கட்டக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். மேலும் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாயனூர் போலீசார் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்திலை கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்தில் இரு தரப்பு ஆவணங்களையும் சரிபார்த்தார். பின்பு இது அரசுக்கு சொந்தமான இடம் என்பதை உறுதி செய்து கழிவறை கட்டும் பணி தொடங்க பாதுகாப்பளித்தார். அதனைத் தொடர்ந்து ஜேசிபி எந்திரம் மூலம் அஸ்திவாரம் எடுக்கும் பணி நடந்தது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது