தாராபுரத்தனூரில் குளம் மற்றும் கால்வாயை ஆய்வு செய்தார் கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 72 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.
வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதியில் பெய்த மழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்த போதும், பெய்த மழையால் காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து கால்வாய் மற்றும் குளங்களில் நிரம்பி வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாராபுரத்தனூர் பகுதியில் சில வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
இதனை அறிந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று அப்பகுதிக்கு சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உடனடியாக மழை நீரை வெளியேற்றுவதற்காக பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
எம்எல்ஏ சிவகாமசுந்தரி மேற்கொண்ட இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், வார்டு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.