கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, வடக்கு நடந்தை அருகே உள்ள நல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் திவாகரன் (28). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழ் (7). தமிழ் நல்லியம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், சம்பவதினத்தன்று தமிழ் அவரது சகோதரருடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான்.அப்போது, திடீரென தமிழ் மயங்கி விழுந்தான். உடனடியாக தமிழை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தமிழை பரிசோதித்த மருத்துவர்கள், தமிழ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், திவாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சம்பவம் குறித்து சின்ன தாராபுரம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சிறுவன் தமிழ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதே பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.