கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, புத்தாம்பூர் 5-ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி மலர்கொடி வயது 70. இவர் பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாலை ஐந்து முக்கால் மணியளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5- ரோடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நடந்து சென்ற மலர்கொடி மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த சம்பவத்தில் மலர்கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் துடித்துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மலர்கொடியின் உடன் பிறந்த சகோதரர் மணி என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மலர்கொடி உடலை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.