கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கச்சேரிநடை பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்பவர் ஆட்டோ தொழில் செய்யும் மாற்றுதிறனாளி கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வீடு வைத்து வசித்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் காலை கிறிஸ்டினா தனது குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த போது அங்கு இருநூறுக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்த கும்பல் கிறிஸ்டினா மற்றும் அருகில் வசிக்கும் ஶ்ரீலதாவின் வீடை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக கொல்லங்கோடு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்தும் குற்றவாளிகளை கைது செய்யாமலும் உரிய நடவடிக்கை எடுக்காமலும் போலீசார் இழுத்தடிப்பு செய்து வந்ததை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையிலான பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (செப்.,27) மாலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளியே செல்வது இல்லை என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.