கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களை போலீசார் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் சாலை விதிகளை மீறிய 1, 178 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நாகர்கோவில் சரகத்தில் 335 பேர் மீதும், தக்கலை சரகத்தில் 291 பேர் மீதும், கன்னியா குமரி சரகத்தில் 343 பேர் மீதும், குளச்சல் சரகத்தில் 209 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.