மணவாளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

999பார்த்தது
மணவாளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள்லிங்கம்(34). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி(32). இந்த தம்பதிக்கு ஆஷிக்(9), ஆஷிகா(8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருள்லிங்கம் தற்போது திருநெல்வேலியில் தங்கி யிருந்து வேலைபார்த்து வருகிறார்.
இதனால் வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு வருவது வழக்கம். மகேஷ்வரி
வெள்ளமோடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மகேஷ்வரி அதே பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் போனில் கூறிவிட்டு 2 பிள்ளைகளுடன் புறப்பட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு திரும்ப வீட்டுக்கு செல்லவில்லை. உடனே மகேஷ்வரியின் அக்காவை அருள்லிங்கம் தொடர்புகொண்டார். அப்போது மகேஷ்வரியும், பிள்ளைகளும் அங்கு வரவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அம்மாண்டிவிளைக்கு வந்து தேடினார். ஆனாலும் 3 பேர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.