கொல்லங்கோடு நகராட்சி 30 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தேனாந்தோட்டம் பகுதி தாழ்வான பகுதி என்பதால் உயர்வான பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சவரிக்குளத்தில் தேங்கி வந்தது.
தற்போது இந்த குளத்தை சுற்றியுள்ள வடிகால் முழுவதும் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால் குளம் நிரம்பி குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
மேலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பலவகை நோய்களுக்கு ஆளாகி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கேட்டு பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் இடைவிடாது பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் புகுந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று சனிக்கிழமை மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.