காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, பழையசீவரம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, நான்கு ஆண்டுகளுக்கு முன், நீர்வள ஆதாரத்துறை, 42 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணைகட்டியது. இங்கு தடுப்பணை கட்டியதால், சுற்றி யுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வ தோடு, அருகில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் சப்ளை செய்ய முடிகிறது.
தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட பின் பலமுறை நிரம்பி வழிந்துள்ளது. இதனால், ஆற்றிலிருந்து அடித்து வரப்பட்ட மணல், தடுப்பணையில் சேகரமாகி, தடுப்பணையின் உயரத்திற்கு சேர்ந்துள்ளது.
இதனால், 6 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட தடுப்பணையில், ஒரு அடி கூட ஆழம் இன்றி மணல் நிரம்பியுள்ளது. இதனால், அதிகளவு தண்ணீர் நிரம்பாமல், வடிந்து செல்கிறது. தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணலை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நீர்வளத்துறை மதிப்பீடு தயாரித்து, கலெக்டர் கலைச்செல்வி, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார். தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணலை அகற்ற, 3. 3 கோடி ரூபாய் அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
பருவமழை இன்னும் ஒரு மாதத்தில் துவங்கவுள்ள நிலையில் நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.