செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி பகுதியில், 1 டன் எடை கொண்ட, பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை, மதுராந்தகம் பகுதியில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், நகராட்சி கமிஷனர் அபர்ணா தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நேற்று, சோதனை நடத்தினர்.
அப்போது, மதுராந்தகம் நகராட்சி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் உள்ள பாலாஜி பிளாஸ்டிக் கடையில், ஒரு முறை பயன்படுத்தி எறிய கூடிய, 1 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 1.25 லட்சம் ரூபாய். இதையடுத்து அந்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள், 40,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அபர்ணா கூறியதாவது: மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.