செங்கல்பட்டு அருகே 5 கோடி மதிப்புள்ளான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எரித்து அழிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் தமிழக போதைத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில் கைப்பற்றப்பட்ட 5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. தமிழக போதைத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1500 கிலோ கஞ்சா மற்றும் 75 கிலோ ஹாஷிஷ் ஆயில் உள்ளிட்டவற்றை நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக போதைத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில் கடந்த வருடம் 16 டன் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் முதல் கட்டமாக 1,400 கிலோ கஞ்சாவை அழித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார். மேலும் புதியதாக 'DRUG FREE TAMILNADU' எனும் செயலியை உருவாக்கியுள்ளதாகவும், அதில் கஞ்சா விற்பனை மற்றும் புழக்கம் குறித்து தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுத்து தகவல் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.