மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு.
அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளீர் காவல் நிலையம் அருகில் யாரும் வசிக்காத பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பாழடைந்த கட்டிடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மாமல்லபுரம் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் அந்த பாழடைந்த கட்டிடத்தில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி. எஸ். பி. ரவிஅபிராம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மர்ம பொருள் வெடித்து அந்த கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்வையிட்டனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர்.