உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வழியாக, செங்கல்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலையை தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022ல், நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி, உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாலையோரம் இருந்த பல வகையான மரங்கள், சாலை விரிவாக்க பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பணி முடிவுற்று நான்குவழிச் சாலை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையில், அகற்றம் செய்த மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை தீர்மானித்தது.
அதன்படி, உத்திரமேரூர் - -புக்கத்துறை சாலையில், 7 கி. மீ. , தூரத்திற்கு புளியன், புங்கன், மகாகனி உள்ளிட்ட வகையிலான 6, 500 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 3, 500 மரக்கன்றுகள் கடந்த ஆண்டு நடப்பட்டன. அந்த மரக்கன்றுகள் தற்போது செழிமையாக வளர்ந்து காணப்படுகின்றன. இச்சாலையில் மரக்கன்றுகள் நடாமல் விடுபட்டுள்ள பகுதிகளில், விரைவில் 3, 000 மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளதாக உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாணராமன் தெரிவித்துள்ளார்.